சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
- நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.
- நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
- மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
- சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள40ஆயிரம் அடுக்கு மாடி குடியிருப்புகள், ரூ.100 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.
- நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தினை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
- அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்துக்குள் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.
- பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரைபரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.