புதுச்சேரி:
பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொறுப்பு துணைநிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி தமிழிசையும் இங்கு வந்து அவருக்கு இடப்பட்ட வேலையை முடித்தார். அதன்பிறகு தேர்தலின்போது முதல்வர் ரங்கசாமியை மிரட்டி கூட்டணி அமைத்து, காங்கிரஸிலிருந்து விலகி போன 6 பேரை வைத்து பணபலம் மற்றும் அதிகார பலத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க 10 இடங்களிலும் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். தற்போது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருக்கின்றனர். தேர்தல் சமயத்தில் இவர்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது புதுச்சேரியை சிறந்த மாநிலம் மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி சொன்னார். நிதியை வாரி வழங்குவோம், கடனை தள்ளுபடி செய்வோம், மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பதவிக்காக பாஜகவிடம் ரெங்கசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.