சென்னை: பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும்  என திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தை முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினன் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ந்தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், இந்தி வில்லனிடம் தமிழ் பேசிவிட்டு வந்து பேசு என டயலாக் பேசும் காட்சி வைரலான நிலையில், இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.  இந்தியில் படத்தை வெளியிட்டு விட்டு, இந்திக்கு எதிரான பேசுவதா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வரும்,  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம்,  வெற்று வேட்டு,  மொக்கைப்படம் என விஜய் ரசிகர்களே விமர்சிக்கும் வகையில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில், முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஜவாஹிருல்லாவும் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்  எழுதியுள்ள கடிதத்தில்,” தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

அதேநேரம், அதை குலைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன.

விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன. முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது.

குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலைத் தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்துள்ளதால்,பல தியேட்டர்களில் கேஜிஎஃப் படம் வெளியிடப்பட்டு, பீஸ்ட் படத்துக்கான காட்சிகளும் குறைக்கப்பட்டு உள்ளன.  கேஜிஎஃப் தமிழக ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஜய் படம் ஒரிரு நாளில் தியேட்டர்களில் இருந்து முழுமையாக தூக்கப்பட்டு விடும் என தெரிகிறது. இதனால் ஜவாஹிருல்லா கோரிக்கைமீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையே இருக்காது.