கொழும்பு:
இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தினர் இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இலங்கை ராணுவ உயர்அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட இந்திய துருப்புக்களின் வருகை பற்றிய செய்திகள் உண்மை அல்ல என்றும், 2021 இன் நட்புரீதியான இந்தியா-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் போலிச் செய்தியில் இடம் பெற்றுள்ளன என்றும் கூறினார்.
“தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கையின் முப்படைகள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை, இதுபோன்ற தவறான தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது” என்று அவர் கேட்டு கொண்டார்.
இந்த தகவலை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.