சென்னை:
மிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அதுவும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் தான் அதிகம் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர் வாகனங்களில் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுக்குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஏராளமாக புகார்கள் வந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு அறிவிப்பில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி அளித்து பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட காலத்திலும் PT பீரியட் என்று கூறப்படும் உடற்கல்வி பீரியடுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூன்றாவது அலைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பின்னர் தற்போதுதான் உடற்கல்வி பீரியடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிடி பீரியடில் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு மட்டும் உடற்கல்வி பாடத்திட்டம் பீரியடில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.