சென்னை: பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக நிதிநிலை அறிக்கையில்,  திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாகவும், அதற்கு பதில் பெண் கல்வி திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவ தாகவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதனப்டி,  சமூக நலத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவித் திட்டம் தான் தற்போது பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்மூலம், அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக பட்ஜெட்டில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சில அரசியல் கட்சிகள்  எதிர்ப்பும்  சிலர் வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு கல்விதான் நிரந்தரசொத்து. அதனால்தான் திருமண உதவித்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியவர், பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றி அமைத்து இருப்பதாகவும், சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

அதாவது பெண் குழந்தைகள், 6வது முதல் பட்டப்படிப்பு வரையிலான சுமார் 10 ஆண்டுக்கான கல்வி செலவு,  அதாவது, ஆண்டுக்கு 12 ஆயிரம் என்ற வகையில் அவர்களின் 10 ஆண்டு படிப்புக்கு சுமார் 1லட்சத்துக்கு 20ஆயிரம் (10 ஆண்டுகள் x 12 x 1000 = ரூ. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 1,20,000) கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் போன்ற பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

தற்போது இளம்பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்க ரூ.50ஆயிரம் வரை மட்டுமே நிதி வழங்கப்படும் நிலையில், பெண்களின் கல்விக்கு சுமார் 1,20ஆயிரம் வரை செலவிடுவது அவர்களின் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.