மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2011-12 முதல் 2020-21 வரையிலான நிதி யாண்டுகளில், செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் விபரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார். இதற்கு அரசு பதில் அளித்துள்ளது.
அதில், அதிமுக ஆட்சியின்போது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.927,61,68,000 (927 கோடி) நிதி செலவு செய்யாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய கார்த்திக், 2016-17 முதல் 2020-21 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.15,192,38,98,000 (15,192 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.14,264,77,30,000 (14,264 கோடி) ரூபாய்க்கு செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் ரூ.927,61,68,000 (927 கோடி) வரை பயன்படுத்தப்படாமல் அரசிற்கு திரும்பி ஒப்படைப்பக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது.
அதுபோல, கடந்த 2020-21 நிதி ஆண்டில் ஆதி திராவிடர் துறைக்கு ரூ.3,552,56,14,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் திட்டங்களுக்கு செலவு செய்தது போக ரூ.249 கோடியே 67 லட்சம் பயன்படுத்தாமல் அரசுக்கு திரும்ப சென்றுள்ளது.
ஆதி திராவிடர்துறைக்கான நிதியானது, சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தவே ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதை அரசும், அதிகாரிகளும் முழுமையாக உபயோகப்படுத்தாமல் வருகின்றனர். இதனால், ஏராளமான மக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.927 கோடிகள் நிதி பயன்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.