சென்னை:
50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், உழவர் சந்தைகளில் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இந்தாண்டு கூடுதலாக 6 ஆயிரத்து 250 ஏக்கரில் பயிரிட விதைகள், குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்படும் எனவும், இந்தத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மாநில அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் 381 கோடி ரூபாயில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், 38 கிராமங்களில் கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் அமைக்க 95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.