2022-23 கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் பிப். 28 முதல் மார்ச் 21 வரை ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தது.

ஆனால், ஒன்றாம் வகுப்பில் சேர குறைந்த பட்சம் 5 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதை திடீரென்று 6 வயதாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இது கவலை கொள்ள செய்ததோடு, மாணவர்களின் படிப்பு ஓராண்டு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 5 வயது சிறுமி சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ரேகா பள்ளி, இதுகுறித்து மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் ஆஜரான சி.பி.எஸ்.இ. தரப்பு வழக்கறிஞர் 2020 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்வி கொள்கை அடிப்படையிலேயே இந்த வயது வரம்பு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இருந்தபோதும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு 5 வயதாகவும் அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 வயதாகவும் உள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சீரான அளவுகோல் இல்லாமல் இருப்பதும், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் திடீர் அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து பதிலளிக்க சி.பி.எஸ்.இ. தரப்பு மேலும் அவகாசம் கோரியதை அடுத்து மார்ச் மாதம் 21 விண்ணப்பிக்க கடைசி நாளாக உள்ளதை சுட்டிக்காட்டினர்.

இதனை அடுத்து, கடைசி தேதியை மேலும் மூன்று வாரங்கள் நீட்டித்து ஏப்ரல் 11 ஆக நிர்ணயம் செய்ய கேந்திரிய வித்யாலயா ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. தரப்பு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 5 நடைபெறும் என்று ஒத்திவைத்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக உயர்வு… திடீர் அறிவிப்பால் காலியாகும் பள்ளிகள்…