சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில முதல்வராக பகவத் மான் இன்று பதவி ஏற்கிறார்.

117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலல்ல், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டிவிட்டு ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.  தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் பஞ்சாபின் துரி தொகுதியில் போட்டியிட்ட அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதுடன், பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் அல்ல; பகத்சிங் பிறந்த ஊரில்தான் என்று அறிவித்தார். அதன்படி,  சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா  இன்று  நடைபெறவுள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் சுமார் 3 லட்சம் பேர்  பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக,50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும் ஆம்ஆம்மி கட்சியினர் மற்றும் பஞ்சாப் மக்கள்  ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வரவேண்டும் என்றும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் பகவத் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.