சென்னை: சாலைமறியல் வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உயர்நீதிமன்றம் ஜாமின் கொடுத்த நிலையில், இன்று காலை  சிறையிலிருந்து விடுதலையானார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகரை தாக்கியதாக வழக்கு, சாலை மறியல் செய்ததற்கான வழக்கு மற்றும், கடந்த ஆண்டு புகார் கூறப்பட்ட , ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக  வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதில் 2 வழக்குகளில் அவருக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்த நிலையில், 3வது வழக்கிலும் நேற்று உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து வாரத்திற்கு மூன்று நாள்கள் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர். ஆதரவாளர்கள் புடை சூழ, அதிமுக ஆதரவு மற்றும் திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன்  ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கட்சியை அழிக்க திமுக முயற்சி செய்கிறார்.  முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே திமுக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை.  ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது, ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின்  என கடுமையாக விமர்சித்தார்.