சென்னை: பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பேரிடர் அபாய மதிப்பீடு மற்றும் சேதங்களின் மேம்பட்ட பகுப்பாய்வினை மேற்கொள்ளும் பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு மாநிலத்தின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் பொறுப்பாகும்.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளினால் பாதிப்புகளுக்குள்ளாகிய இடங்களை சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். பேரிடர் பாதிப்பு மற்றும் சேதம் ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் மாவட்ட மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் உண்மையான நிலவரத்தை கண்டறியும் கலந்தாய்வுகள் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கலந்தாய்வு முடிவுகளை பரிசீலித்து பாதிப்படையக் கூடிய இடங்களை கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை, அதை சார்ந்த கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் / அலுவலர்களைக் கொண்டு பேரிடர் குறித்த ஆய்வுகளை நடத்தி உள்ளூரில் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அமைபபின் கீழ் தற்போது, தமிழ்நாடு பேரிடர் தணிப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடரின் போது முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 20% வரை ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.