சென்னை:
பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனையோடு இருக்கும் 7 பேரில் முதல் முதலாக இப்போதுதான் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார். அதில், ” பேரறிவாளன் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை கருதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க துணை நின்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அதோடு தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.