தூத்துக்குடி: “பதவி அல்ல; பொறுப்பு”; தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை என தூத்துக்குடியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, உள்ளாட்சியில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துள்ள பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
தூத்துக்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை கழகம் காணாத மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தந்திருக்கிறீர்கள் அனைவருக்கும் எனது நன்றி. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
”உள்ளாட்சிப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ஆம் தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, சாதாரண வெற்றியல்ல, இதுவரையில் கழகம் கண்டிராத வெற்றி. எனவே அப்படிப்பட்ச்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், அந்த வெற்றியை பெற்றதற்கு பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம், முதல் நிகழ்ச்சியாக, இந்தத் தூத்துக்குடியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
இவ்வளவு பெரிய வெற்றியை காண்பதற்கு நம்முடைய தலைவர் கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் என்னுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், “இதோ தூத்துக்குடியில் மாவட்டக் கழக அலுவலகத்திற்கு முன்பு நான் நிற்கிறேன் வாடா” என்று என்னை இங்கு அழைத்து, அதன் மூலமாக அவருடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு உங்கள் அனைவரின் சார்பில் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
அந்த வாய்ப்பினை வழங்கி இருக்கும் மாவட்டக் கழகத்திற்கும், அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழி அவர்களுக்கும், இந்த மாவட்டத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை அவருடைய மறைவிற்கு பிறகு முதன் முதலில் சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் நாம் திறந்து வைத்தோம். அதற்குப் பின்னால் அவருடைய குருகுலமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈரோட்டில் திறந்து வைத்தோம். அவரை உருவாக்கிய அண்ணன் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடர்ந்து திறந்து வைத்தோம். அதற்குப் பின்னால் அவருடைய மூத்தப் பிள்ளையாகக் கருதும் முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தோம். இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தம்பியாக – பாசத்திற்குரிய தம்பியாக விளங்கிய நம்முடைய அண்ணாச்சி பெரியசாமி அவர்கள் பிறந்த இந்த மண்ணில் அவரால் உருவாக்கப்பட்ட இந்த மாவட்டக் கழக அலுவலகத்திற்கு முன்னால் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்திற்கு முன்னால் உங்கள் அனைவரின் சார்பில் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், அவருடைய வழிநின்று – அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றியிருக்கிறாரோ, எவற்றையெல்லாம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறாரோ அவற்றையெல்லாம் நாங்கள் நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றுவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சியை நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.
பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கும், உள்ளாட்சியில் இன்றைக்கு மேயர்களாக, துணை மேயர்களாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக, பேரூராட்சித் தலைவர்களாக, துணைத் தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக, அதேபோல் ஊரகப் பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சிப் பொறுப்புகளிலும் பொறுப்பேற்று கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, ஏன் அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் இன்றைக்கு எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி என்னவென்று கேட்டால், அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வதுண்டு “மக்களிடம் செல், மக்களுடன் சேர்ந்து பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ்” என்று நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
எனவே அதை உணர்ந்து நாம் நம்முடைய கடமையை ஆற்ற அவருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.