சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும் என்று தமிழகஅரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளி கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை திறக்கும்போது, உள்ளூர் பகுதி மக்களின் கருத்துக்கள் குறித்தும் கவனத்தில் கொண்டு, நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
இநத் நிலையில், தற்போது தமிழகஅரசு புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மக்களின் ஆட்சேபத்தை மீறி கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது உள்பட பல விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் பரிசீலிக்க வேண்டும்.
மக்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகளை தடுக்கலாம், மக்களின் ஆட்சேபங்களை ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்
மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது
ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.