நியூயார்க்
ரஷ்ய ராணுவம் உக்ரைனில் இருந்து வெளியேற ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது
பல உலக நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதையொட்டி ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா.சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
உடனடியாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான மோதலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 193 நாடுகளை உறுப்பினர்களில் ஆதரவாக 141 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்த வாக்களிப்பை இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐ.நா. வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேறப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தவிர இரு நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் உக்ரைன், ரஷ்யா இடையில் உடனடி போர் நிறுத்தத்திற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.