ஜூரிச்: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியாக,  பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளது. முன்னதாக உலக சாம்பியனான பிரான்ஸ் 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யாவைத் தடை செய்யக் கோரியிருந்தது.

2022ம் ஆண்டு பிஃபா உலக கோப்பை கால்பந்துபோட்டி கத்தாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட உலக கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியானது,  நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து யுத்தம் செய்து வருவதால், பல நாடுகள், ரஷியாவின் நடவடிக்கைகக்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், ரஷியாவுக்கு எதிரான போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்தும் விலக முடிவெடுத்து வருகின்றன.

உலக சாம்பியனான பிரான்ஸ் 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யாவைத் தடை செய்யக் கோரியிருந்தது. அதைத் தொடர்ந்து, 2022 ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான பிளே ஆஃப் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என போலந்து நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.  இதுகுறித்து பேசிய போலந்து நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தலைவர் சீசரி குலேஷா (Cezary Kulesza)   வரும் மார்ச் 24-ஆம் தேதி அன்று இரு அணிகளும் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற இருந்த பிளே ஆஃப் போட்டியில் விளையாடாது என்று கூறியுள்ளார்.

அதுபோல,  ஸ்வீடன், செக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகள் கூட்டாக சேர்ந்து ரஷ்யாவில் நடைபெற உள்ள பிளே ஆஃப் போட்டிகளை வேறொரு நாட்டிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு பிஃபா அதிரடியாக தடை விதித்துள்ளது. ரஷ்ய அணிகள் “ரஷ்யாவின் கால்பந்து ஒன்றியமாக” விளையாடும் என்று ஃபிஃபா கூறியது. ரஷிய அணியினர், ரஷ்யா என்ற பெயர், மற்றும் ரஷ்ய நாட்டின் கொடி மற்றும் நாட்டின் தேசிய கீதம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள பிஃபா கூட்டமைப்பின் தலைமை அதிரடியாக அறிவித்து உள்ளது.