கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்
காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் சென்றால் 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது இக்கோயில்.
1000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில் என்று வரலாறு சொல்கிறது. கோவில் கட்டி ஏறக்குறைய 1300 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏழு நிலை இராஜகோபுரம் அழகிய சிற்பங்களுடன் வானளாவி உயர்ந்து நிற்கிறது. மற்ற கோவில் கோபுரங்களைவிட இதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் காணப்படும்.
திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவிலை பாண்டிய மன்னனான வீரசேகர பாண்டியன் ஆண்டு வந்த போது சிவனருளால் கொற்றவாள் ஒன்றைப் பெற்றிருந்ததாகவும், அதன் மூலம் பகை மன்னர்களை வென்று வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்த தன் பக்தனான பாண்டியனிடம் சிறு திருவிளையாடல் நடத்த விரும்பிய சிவன், வீரசேகர பாண்டியன் வேட்டைக்குச் சென்ற போது ஒரு மாயமானை அவன் முன் வரவைக்க, அதை விரட்டிச் சென்றவனின் கையில் இருந்த கொற்றவாள் மாயமாக மறைந்து போனதாம்.
அந்த வாளைத் தேடி அவன் காட்டுக்குள் அலைந்த போது ஒரு அந்தணனையும் புலியையும் வீரசேகர பாண்டியன் முன்னே வரவைத்தார் சிவன் என்றும், தன்னைக் காக்கும்படி வேண்டிக் கொண்ட அந்தணனைக் காக்கும் பொருட்டு புலியுடன் சண்டையிடுவது என முடிவு செய்து அவன் களமிறங்கியபோது சிவனின் திருவிளையாடலால் தோன்றிய அந்தணனும் புலியும் மாயமாய் மறைந்து போக, அருகிலிருந்த வன்னி மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாகச் சிவலிங்கமும் அதன் அருகிலேயே மாயமான அவனது கொற்றவாளும் இருந்ததாகவும் இந்தத் திருவிளையாடலால் மனம் மகிழ்ந்தவன் அந்த லிங்கத்தையே மூலவராக்கி அங்கு ஒரு கோவிலைக் கட்டினான் என்றும் கொற்றவாளை மன்னனுக்கு வழங்கியதால் ‘ராஜகட்கபரமேஸ்வரர்’ என்ற பெயரில் மூலவர் அழைக்கப்பட்டதாகவும் பின்னர் ‘கொற்றவாளீஸ்வரர்’ என்ற பெயர் நிலைத்ததாகவும் வரலாறு சொல்கிறது.
மேலும் மதுப்பிரியன் என்னும் முனிவரின் தவத்திற்கு அருள் புரிந்ததால் ‘திரிபுவனேஸ்வரர்’ என்ற பெயரும் மூலவருக்கு உண்டு என்பதும் வரலாற்றுச் செய்தி.
இங்குக் குடிகொண்டிருக்கும் அம்மனுக்கும் ஒரு திருவிளையாடல் கதை இருக்கிறது. இது அம்மன் உருவான கதை அல்ல… கொற்றாளீஸ்வரருடன் பார்வதி அம்மனும் இத்தலத்தில் வீற்றிருக்க ஆரம்பித்த பின்னர் ஒரு காலத்தில் நடந்த திருவிளையாடல் இது.
சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியர் விவசாயம் செய்து வந்தனர். அவர்களின் வயலில் நெற்கதிர் விளைத்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. மயில் போன்ற பறவைகள் நெல்லை உறுவித் தின்று செல்லும் என்பதால் யாராவது ஒருவர் பகலெல்லாம் வயலில் காவல் இருப்பது வழக்கம். அதேபோல் அன்று தனது மகளான சிறுமி அரதனவல்லியை காவலுக்குச் செல்லுமாறு பணிந்திருக்கிறாள் சுதன்மை. வயலில் காவல் இருக்கும் மகளுக்குத் தயிர்ச் சாதத்தை எடுத்துக் கொண்டு போய் தன் கையால் ஊட்டியபோது மகளும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டிருக்கிறாள்.
திரும்பி வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரத்தில் அங்கு வந்த அரதனவல்லி பசிக்குதும்மா சோறு போடுங்கள் என்று கேட்டிருக்கிறாள். என்னடி இப்பத்தானே சாப்பாட்டை நான் உனக்கு ஊட்டி விட்டேன்… மறுபடியும் பசிக்குதுன்னு வந்து நிக்கிறே என்று கேட்டதும் நான் எங்கே வயலுக்குப் போனேன்… நான் தோழியருடன் அருகில் இருக்கும் மலர்சோலையில் அல்லவா விளையாண்டு விட்டு வருகிறேன் என்று சொல்ல, அப்போதுதான் தன் மகளுக்காக அந்தப் பார்வதி தேவியே வயலுக்கு வந்து காவல் இருந்திருக்கிறாள்… தன் கையால் சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறாள் என்பதும் சுதன்மைக்குத் தெரிய வருகிறது. நெல் வயலைக் காத்ததால் நெல்லையம்மன் என்று அழைக்கப்பட்டார் என்பது இந்த கோவிலில் இருக்கும் அம்மனின் பெருமையாகச் சொல்லப்படுகிறது.
பிரதோஷம், பௌர்ணமி மற்றும் சிவராத்திரி போன்றவை விஷேச தினங்களாகும். வேலை கிடைக்கவும் படிக்கச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாய் வீடு திரும்பவும் இங்கு பிராத்திக்கப்படுகிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
கோவில் நடை காலை 7 -11 மாலை 4-8 வரை திறந்திருக்கும்.