சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட ராஜவர்தன் ஹக்கர்கேகர் வயது மோசடி செய்ததாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய அணி ஐந்தாம் முறையாக ஜூனியர் உலகக்கோப்பையைக் கைப்பற்ற முக்கியப் பங்கு வகித்தவர் மும்பையைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆவார். இவர் உலகக் கோப்பை தொடரில் திறமையான வேகப் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் பேட்டிங்கில் அதிக தூர சிக்ஸர்களை விளாசி எத்திரணிகளைக் கலங்கடித்தார்.
நடந்த முடிந்த ஐ பி எல் ஏலத்தில் சென்னை அணியால் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ராஜ்வர்தன். ஜூனியர் உலகக்கோப்பையில் அவரின் விளையாட்டு அனைவரையும் ஈர்க்கவே, அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணி முயற்சித்த போதிலும் சென்னை அவரை போட்டிக்கு மத்தியில் வாங்கியது.
ராஜ்வர்தன் வயது மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று மகாராஷ்டிர விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக பிசிசிஐக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாகவும் கடிதத்துடன், ராஜ்வர்தன் ஹக்கர்கேகர் வயது மோசடி செய்ததற்கான ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மராத்தி நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள செய்தியில், “ஹங்கர்கேகரின் உண்மையான வயது 21. டெர்னா பப்ளிக் பள்ளியின் மாணவரான ஹங்கர்கேகர் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு என்பதற்குப் பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார்.
இந்த வயது குறைப்பால் அவரால் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாட முடிந்தது. இதனை ஐஏஎஸ் அதிகாரி ஓம்பிரகாஷ் பகோரியா உறுதிப்படுத்தியதோடு அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து பிசிசிஐக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால் ராஜ்வர்தனுக்கு இரண்டு ஆண்டுகள் விளையாடத் தடைவிதிக்கப்பட வாய்ப்புள்ளது.