சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் குட்டு காரணமாக, தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும், சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு நாளை (19ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6மணியுடன் முடிவடைந்த நிலையில், வெளியூர் நபர்கள், தேர்தல் நடைபெறும் பகுதிகளை விட்டு வெளியே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் வெளியூர்களை சேர்ந்தவர்களை அரசியல் கட்சியினர் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, கள்ள ஓட்டுபோடுவதைத் தடுக்கவும், வன்முறைகள், கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், மண்டபங்கள், சந்தேகத்திற்குரிய வீடுகளில் காவல்துறையில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா என்று சோதனை நடத்தி வருகின்றனர். வெளியூர் நபர்கள் தங்கி இருந்தால், அவர்கள் எதற்காக வந்துள்ளனர், அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனை நடந்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, 74 ஆயிரம் போலீஸார், தமிழக சிறப்பு காவல் படையினர் 8 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையினர் 14 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.