சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் முழுமையாக திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையிலம், நாளை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி, திருவண்ணாமலையில் கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இது ஆன்மிகவாதிகள் மற்றும் இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வழிபாட்டுத்தலங்களை முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில், இந்த மாதம் இன்று இரவு (15ந்தேதி) தொடங்கும் பவுர்ணி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வருவர். மேலும் மாசி மாத பௌர்ணமி இன்று ( பிப்.15 ) இரவு 10.30 மணி முதல் நாளை ( பிப்.16 ) இரவு 11.30 வரை உள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மேலும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.