கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வராய்ச்சியில் பண்டைய தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கட்டிடங்கள் உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இது உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களைக் கொண்டு அங்கு அருங்காட்சியம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் இதுவரை 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் பாசிமணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உட்பட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.அவை அனைத்தும் மக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக 8வது கட்ட அகழ்வாய்வு பணியை தமிழகஅரசு தொடங்கும் என ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரச ஏற்கனவே அறிவித்தது. இதையடுத்து, 8வது கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை 10.30 மணிக்கு jலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த அகழ்வாய்ப்புபணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் செப்டம்பர் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.