சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையகத்தில் நள்ளிரவு ஒருமணி அளவில் வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர். இந்த குண்டுவீச்சில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அலுவலகம் மூடப்பட்டி ருந்ததால், சேதம் மற்றும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல் துறை பாதுகாப்பை மீறி, துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தார்களா இல்லையா, இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றபோது அவர்கள் எங்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இது சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகே உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், பெட்ரோல் குண்டுகளை வீசியது தொடர்பாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடி கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெட்ரோல் குண்டுவீசியதாக வினோத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.