சென்னை: ‘நீட்’ தேர்வு எதிர்ப்பில் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உறுதிஅளித்தார்.
“விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும்!” “பொற்கால ஆட்சிக்கு, உங்களது பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள்” என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை தொண்டர்கள், பொதுமக்கள் காணும் வகையில் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 300 இடங்களில் திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த காணொளி வாயிலான பிரச்சாரத்தின்போது முதல்வர் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாக நீட் தேர்வு இருக்கிறது. ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். வரும் 8-ம் தேதி மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம். கடந்த ஆட்சியில் அனுப்பிய மசோதாவை பாஜக அரசு மதிக்கவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்காமல் குடியரசுத் தலைவரால் அது நிராகரிக்கப்பட்டது. அதை அன்றைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூடி மறைத்துவிட்டார். சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டபோது, எந்த தகவலும் வரவில்லை என்றார்.
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. நீட் எதிர்ப்பில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தமிழகத்துக்கு விரோதமான எல்லா திட்டங்களையும் எதிர்ப்போம். உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையாக வெற்றிபெற்றால்தான் அரசு நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க முடியும். அதற்காக திமுக, கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
கோவை கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகரில் நடைபெற்ற காணொலி பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் பையா ஆர்.கிருஷ்ணன், நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி, வரதராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, மற்ற இடங்களில் நடந்த கூட்டங்களில் எம்.பி.க்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், திமுக மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.