சென்னை
இனி பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடக்காது எனவும் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டாம் அலை கொரோனா பரவலால் மீண்டும் மூடப்பட்டுக் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் பள்ளிகள் அடைக்கப்பட்டன.
தமிழக அரசு நேற்று வரும் பிப்ரவரி 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதே வேளையில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“வரும் பிப்ரவரி 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. இந்த நேரடி வகுப்புக்கள் 100% மாணவர்களுக்கும் நடக்க உள்ளதால் இனி சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடக்காது. அனைத்து பள்ளிகளும் கொரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.