சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் அதன் காரணமாக அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர்கள் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் ஜனவரி 1ந்தேதி முதலே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், நேற்று மேலும் 29,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை  மொத்தம் 32,34,2636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை தொடர்கிறது. மேலும், சென்னையில், நேற்று  5,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,10,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள்  வருகிற ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.