திருப்பதி

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.66 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்

பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காலத்தில் பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாகச் சுவாமி தரிசனம் செய்தால் வைகுண்டம் சென்று பெருமாளை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருப்பது வழக்கமாகும்.

திருப்பதி அறங்காவலர் குழு ஸ்ரீரங்கத்தைப் போலத் திருப்பதியிலும் 10 நாட்களுக்குச் சொர்க்கவாசலைத் திறந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.  அதன் அடிப்படியில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 10 நாட்கள் திருப்பதியில் சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட்டிருந்தது.   இந்த மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட்ட சொர்க்க வாசல் 10 நாட்கள் கழித்து நேற்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டது.

இந்த 10 நாட்களில் சொர்க்கவாசல் வழியாக 3,77,943 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.   இந்த பக்தர்களில் 1,83,999 பக்தர்கள் மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.   பக்தர்கள் இந்த 10 நாட்களில் உண்டியல் மூலம் ரூ.26.06 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.  இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.