சென்னை:
தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29,870இல் இருந்து 30,744ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இம்மாத இறுதியில் தான் உச்சத்தை அடையும் என கூறப்படுகிறது. தற்போதே 30 ஆயிரம் பாதிப்புகள் என்றால் உச்சத்தை அடையும் போது எவ்வளவு பாதிப்புகள் பதிவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ஞாயிறன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால், வழக்கம் போல் இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதேசமயம், ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்க பல மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வாரக் காலம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பாதிப்பு சரியாகிவிடுகிறது என்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசுகள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.