சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை  வழங்கியது.  அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேசன் அடைகளிலும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் வழங்கப்பட்ட பொருட்கள் குறைவாக இருந்ததும், அதில் உள்ள வெல்லம், மிளகு போன்றவை தரமற்ற நிலையில் காணப்பட்டதுடன், மஞ்சள் பொடியில் கோலமாவு கலந்திருந்த அவலங்களும் காணப்பட்டன. இதனால், பல பகுதிகளில் பொதுமக்கள் ரேசன் கடைக்காரர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். வெல்லம், ஒழுகிய நிலையில் தரமற்றதாக இருந்ததாக வீடியோ கூட வைரலானத,

இதற்கிடையில், பொங்கல் தொகுதிப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டு கூறிய நபர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்தினரை மிரட்டியதால், அவரது மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடைபெற்றன. இதனால், பொதுமக்களிடையே திமுக அரசுமீது கடுமையான அதிருப்தி எழுந்தது.

இந்த விவகாரத்தை அதிமுகவும் கடுமையாக விமர்சித்தது.  பொங்கல் தொகுப்பிற்காகக் கூடுதல் விலை கொடுத்து பொருட்கள் வாங்கப்பட்டதாகவும்,  தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்  குற்றஞ்சாட்டி வந்தனர். இதற்காக ஒதுக்கப் பட்டிருந்த 1300 கோடி நிதியில் முறைகேடாக 500 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்தாண்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்திருந்ததில் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் அரசு நிர்ணயித்திருந்தும் விவசாயிகளுக்குக் கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் மட்டுமே அரசு வழங்கியுள்ளது என்றும், கரும்பு கொள்முதலில் மொத்தமாக 34 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

ஆனால் அமைச்சர் சக்கரபாணியோ, பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டே கொள்முதல் நடைபெற்றது என்று  விளக்கம் அளித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்களின் அதிருப்தியை போக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோட்டை வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.