மதுரை: ஒருவர் தவறு செய்வதற்கு துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்ற சாட்டை முருகன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து நாம் தமிழர் கட்சி பிரமுகரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன்  கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமினின் விடுவிக்கப்பட்டு உள்ளார். அதுபோல,   திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கு மற்றும்  ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை குறித்து போலி செய்தி வெளியிட்டது என மேலும் 2 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகளில், ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சாட்டை துரைமுரகன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை,  நீதிபதி முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  இரு வழக்குகளில் துரைமுருகனுக்கு ஜாமின் வழங்கினார். வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று இதுபோன்ற சம்பவங்களில் மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார். அத்துடன்,  இனி முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறு பரப்ப மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக சாட்டை துரைமுருகன் உறுதியளித்தார்.

ஆனால், சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, நீதிபதி யுடியூப் தளத்தை கடுமையாக  விமர்சித்தார்.

ஒருவர் தவறு செய்ய துணைபுரியும், வீடியோ இணையதளமான  யூடியூப்பும் சட்டப்படி குற்றவாளி என்று கூறியவர், “யூடியூப்பை பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர். எனவே அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவர்,

தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் மொத்தமாக தடை விதிக்க கூடாது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும் என்று கூறியவர்,  யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.