டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு காரணமாக, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம், உச்சநீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஜனவரி 28 வரை நடக்கும் முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்ரவரி 4 கடைசி நாளாகும்.

மாநில அளவில் மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜனவரி 27ம் தேதி தொடங்க உள்ளது.