டெல்லி: 5 நாள் நடைபெறும் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. காணொளி காட்சியாக நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இரவு 8.30 மணி அளவில் சிறப்புரை ஆற்றுகிறார்.
ஆண்டுதோறும் நடைபெறும் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு, இந்த ஆண்டும் சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த 5 நாள் மாநாடு காணொலி வாயிலாக நடைபெறும் என உலக பொருளாதார கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் மாநாடுக்கு ‘டாவோஸ் செயல்திட்ட மாநாடு’ என்று பெயரிடப்பட்டு 2 அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2022-ம் ஆண்டில் தங்களது தொலைநோக்கு பார்வை குறித்து உலக தலைவர்கள் பகிர்ந்து கொள்ளும் முதல் மேடையாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த மாநாட்டில், முதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து, இன்று இரவு 8.30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக சிறப்புரை ஆற்றுகிறார். உலகத்தின் நிலை என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். அவருக்கு பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசுகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட், ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ ஆகியோர் பேசுகிறார்கள். அதன்பிறகு நடக்கும் சிறப்பு அமர்வு களில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதனம் ஜிப்ரியசஸ், சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனம்வாலா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
19-ந் தேதி, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் பேசுகிறார். 20-ந் தேதி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் பேசுகிறார்கள். கடைசி நாளான 21-ந் தேதி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், நைஜீரிய துணை அதிபர் யேமி ஒசின்பஜோ ஆகியோர் பேசுகிறார்கள்.