சென்னை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 23,975 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 29,39,923 ஆகி உள்ளது. இதில் சென்னை நகரில் மட்டும் இன்று 8987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை நகரில் 57,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல் படுத்தி உள்ளது. அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பல சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நிர்வாகம், “நாளை (17/01/2022) முதல் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுகிறது. இனி வரும் நிலைமையைப் பொறுத்து அதற்கேற்ப முடிவு செய்து திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.