திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டி மாட்டின் உரிமையாளர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி, இன்று மதுரை அவனியாபுரத்திலும், திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரிலும் நடைபெற்று வருகிறது.
இங்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன், இன்றைய போட்டிக்கு 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு போட்டியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார். காலை 10.30 மணிவரை நடந்த போட்டியில் 100 மாடுகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. 15 மாடுகள் மட்டுமே வீரர்களால் அடக்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், ஜல்லிக்கட்டு காளை முட்டி, உரிமையாளரான ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 30) என்பவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, வாடிவாசல் வழியாக வந்த ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன் (18) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.