திருச்சி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வார ஜாமீனில் திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இவற்றை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. அவ்வகையில் பல முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கு குறித்து சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு பதியப்பட்ட நிலையில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே தலைமறைவாகிய ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் காவல்துறையினர் 20 நாட்கள் கழித்து கர்நாடகாவில் கைது செய்தனர். அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று உச்சநீதிமன்றம் 4 வார நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்தி ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.