சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 18 நாள்களுக்குப் பிறகு கடந்த 5 ஆம் தேதி கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதற்கிடையில் அவர்மீது மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஜனவரி 6 ஆம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூா் மாவட்டக் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பரம்வீா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக அவர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரண ஜனவரி 7ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி கைது விவகாரத்தில், தமிழகஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது. அதையடுத்து வழக்கு இனறு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் அடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணை அமைப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், வெளி ஊர்களுக்கு எங்கும் செல்ல கூடாது என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டது.
முன்னதாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பு ஆஜரான வழக்கறிர், தனக்கு முன்ஜாமீன் மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்ற முன்னாள் உத்தரவுகள் எதிரானது என்று சுட்டிக்காட்டியதுடன், போலீசாரின் கட்டாயத்தால் விஜய் தம்பி புகார் அளித்துள்ளார். ஒருவரை காவல்துறை எவ்வளவு கட்டாயப் படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். அனுமானத்தின் அடிப்படையில் கைது செய்யக் கூடாது என உச்ச்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த புகாரின்பேரில், தான் ஆஜராகக் ஒரு சம்மன் கூட வழங்கப்படவில்லை, ஆஜராக தயாராக இருந்தும் சம்மன் வழங்காமல் எப்பபடி ஆஜராக முடியும். காவல்துறை நீதிமன்ற விதிகளை பின்பற்றாமல் தன்னை கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், தன்னை, 300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சிறையில் அடைக்க காரணம் என்ன. விருதுநகரில் பதியப்பட்ட புகாருக்கு திருச்சி சிறையில் ஏன் அடைக்க வேண்டும் தமிழக அரசு திட்டமிட்டு அனைத்தையும் செய்து வருகிறது என கூறப்பட்டது.
இதையடுத்து, தமிழகஅரசின் நடவடிக்யை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜியை வேறு சிறைக்கு கொண்டு செல்லப் பட வேண்டிய அவசியம் என்ன, இதுபோன்ற காவல்துறையின் நடவடிக்கைகள் சந்தேகங்களை எழுப்புகின்றன என்று கூறியதுடன், தமிழக அரசின் சிறைகள் நிரம்பி வழிகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல கைதிகளை விடுவிக்க கூறி உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும் தமிழக அரசு அந்த நடைமுறையை இதுவரை பின்பற்ற வில்லையே என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அவருக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.