லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் 13 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு மாற உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் ேததி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக நேரடி பிரச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையம் வழியாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.உ பி மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
சுவாமி பிரசாத் தனது ராஜினாமா கடிதத்தில், “நான் மாறுபட்ட சித்தாந்தம் கொண்ட யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினேன். உபி அரசு தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுவதால் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
அவர் அகிலேஷ் யாதவை சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மூன்று பாஜக எம்எல்ஏக்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்து அவர்களும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். அகிலேஷ் யாதவுடன் உ.பி.யில் கூட்டுப் பிரச்சாரம் செய்து வருகிறார். சரத்பவார், “விரைவில் உ.பி.யில் மாற்றம் வரும். மவுரியா இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளனர். நீங்கள் வரும் நாட்களில் இதைப் பார்க்கலாம், பாஜகவில் இருந்து பலர் வெளியேறுவார்கள். ” எனத் தெரிவித்துள்ளார்.