மைசூரு: தேவைப்படும்போது கடன் தர மறுக்கும் வங்கி நமக்கு எதுக்கு என கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடன் தர மறுத்த வங்கியை நபர் ஒருவர் தீ வைத்து கொளுத்தினார். இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, மக்களின் வாழ்வாதாரம் இன்னும் முழுமையாக திரும்பியபாடில்லை. இந்த நிலையில், மீண்டும் தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த,  வாசிம் முல்லா என்ற நபர் அதே பகுதியில் உள்ள கனரா வங்கியில், தனக்கு புதிய தொழில் துவங்க முத்ரா கடன் கேட்டு கடன் வழங்குமாறு மனு அளித்துள்ளார். ஆனால், அவரது மனுவை ஆய்வு செய்த வங்கி நிர்வாகம் அவருக்கு கடன் மறுத்துவிட்டதாக கூறபிபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாசிம் முல்லா, கடன் தர மறுத்த அந்த வங்கியை தீ வைத்துகொளுத்தினார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் முல்லாவை பிடித்துக்கொண்டனர். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, கடன் மறுத்ததால், ஆத்திரமடைந்த முல்லா,  கடந்த சனிக்கிழமை இரவு வங்கிக்கு சென்று, வங்கியின் ஜன்னலை உடைத்து தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை வங்கி வளாகத்திற்குள் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி உள்ளது தெரிய வந்தது.

இந்த தீவிபத்தில், வங்கியில் இருந்த உட்கட்டமைப்பு முழுவதுமாக எரிந்து நாசமாகி விட்டதாகவும்,  சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமடைந்தது என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணம் இந்த தீ விபத்தில் இருந்து  தப்பித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடன் தர மறுத்த வங்கிக்கு தீ வைத்த வாசிம் முல்லா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 436, 477, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.