டெல்லி: கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும்,  இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்களப் பணியாளர்களைக்கொண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படவும்  அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி,  கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும்  இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம் என்றும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை தர பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.