சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக, திறக்கப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதன்படி ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், ஆன்லைன் வாயிலாக மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேர ஊரடங்கும், வார இறுதிநாள் ஞாயிறன்று முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று உயர்அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், கல்லுாரி தேர்வுகள் கட்டாயம் நேரடியாகவே நடத்தப்படும் என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி ஜனவரி 20ந்தேதிக்கு பிறகு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்றும், ஆன்லைனில் நடத்தும் முடிவை அரசு கைவிட்டு விட்டது. அதனால், ஆன்லைன் தேர்வு முறை வரும் என்று பரவும் வதந்திகளை நம்பி, மாணவர்கள் பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம். நேரடியான தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பின்னர் தேர்வுகள் நடைபெறும் எனவும், எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
எனவே,விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து மாணவர்கள் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக,தேர்வுக்காக மாணவர்களுக்கு விடுமுறை ‘study holiday’ விடப்பட்ட நிலையில்,இந்த விடுமுறை நாட்களில் கல்லூரிகள்,வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரிகள் திறப்பு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.