சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்சில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று 60 மாணவர்களுக்கு மட்டுமே தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக மொத்த எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 90% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டை  எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் படித்து வந்த மொத்தமுள்ள  1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,   இதுவரை 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டது.  தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதே சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து அங்கு பணியாற்றி வரும் சுமார் 250பேர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,  சுமார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..