சென்னை: வடசென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, ராயபுரம் மண்டலத்திலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. கொரோனா 2வது அலையைப் போன்று 3வது அலையும் பரவி வருவதால், தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள மாநிலஅரசும், சென்னை மாநகராட்சியும் பொது மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதுபோல, சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் குடிசை பகுதியில் தொற்று அதிவேகமாக பரவி வருவது கண்டறியப் பட்டு உள்ளளது 52-வது வார்டில் மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவி உள்ளது. ஈ.வே.ரா. பெரியார் சாலை நால்ரோடு பகுதியிலும் தொற்று அதிகரித்துள்ளது
இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகின்றனர். முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்களை சேகரித்து அந்த பகுதியில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல பாதிப்பு அதிகம் உள்ள மற்ற மண்டலங்களிலும் தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்னும் 6 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளனர். கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.