டெல்லி: தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், வார இறுதிநாட்கள் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று மட்டுமின்றி ஒமிக்ரான பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஏற்கனவே, அங்கு திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா மாதிரியானவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘மஞ்சள் நிற அலர்ட்’ விடுத்துள்ளது. அத்துடன் இரவு நேர ஊரடங்கும் டெல்லியில் அமல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு மேலும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மாநிலஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் முடிவு தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.