சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ரவி, ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல 16 எஸ்.பி.க்களை டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கியும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை நிர்வாக வசதிகளுக்காக, சென்னை மாநகர காவல்ஆணையம் மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என பிரித்து அரசாணையும் வெளிடப்பட்டது.
இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய ஆணையரகம் இன்று திறக்கப்படும் நிலையில், டிஜிபி ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக நியமித்து தமிழகஅரசு உத்தரவிட்டுஉள்ளது.
மேலும், 16 எஸ்.பி.க்களுக்கும் டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுஉள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டு உள்ளார்.