கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடல், ஓ.டி.டி.யில் வெளியான படங்களுக்கு எதிர்ப்பு என்று பல்வேறு சவால்களை திரைத்துறையினர் சந்தித்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது.
இந்திய திரையுலகின் மூத்த நடிகர் திலீப் குமார் மட்டுமன்றி பிரபல நடிகர்களான புனித் ராஜ்குமார் மற்றும் விவேக் ஆகியோரையும் இந்த ஆண்டில் இழந்தது திரைத்துறை.
2021 ம் ஆண்டு மறைந்த பிரபலங்கள் :
உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி
மலையாள திரையுலகில் தாத்தா வேடங்களில் கலக்கி வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஜனவரி 20 அன்று தனது 97 வது வயதில் கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சலால் காலமானார். தமிழில் வெளியான பம்மல் சம்பந்தம் மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் நடித்துள்ளார் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.
எஸ்.பி. ஜனநாதன்
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற ‘இயற்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான எஸ்.பி. ஜனநாதன், அதன் பின் ‘ஈ’, ‘பேராண்மை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஜனநாதன் மார்ச் 14 அன்று தனது 61வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
விவேக்
‘சின்ன கலைவாணர்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றி ரசிகர்களை மகிழ்வித்ததோடு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16 ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் ஏப்ரல் 17 அன்று அகால மரணமடைந்தார், அப்போது அவருக்கு வயது 59.
கோமகன்
ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலில் தோன்றிய இசைக்கலைஞர் கோமகன் 48 வயதில் மே 6 அன்று காலமானார்.
திலிப் குமார்
1944 ம் ஆண்டு இந்தி திரையுலகில் காலடி எடுத்துவைத்து இந்திய திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த முதுபெரும் நடிகர் திலீப் குமார் 98 வயதில் ஜூலை 7 அன்று காலமானார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற திலீப் குமார் திரைத்துறையினருக்கு இந்திய அரசு வழங்கும் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப்பித்தன்
எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எழுதி திரையுலகில் பிரபலமான புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் படம் தொடங்கி 100 க்கும் மேற்பட்ட படங்களில் 1000 த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இசையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர். மறைவு செப்டம்பர் 8, வயது 85.
புனித் ராஜ்குமார்
நாற்பத்தி ஆறே வயதான புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 அன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தது கன்னட திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்றே குறிப்பிடவேண்டும்.
இந்த பிரபலங்கள் தவிர, சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ், பாடலாசிரியர் பிறைசூடன், பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் சிவசங்கர் மற்றும் பாடகர் மாணிக்க விநாயகம் என்று ஏராளமான பிரபலங்களை திரையுலகம் இழந்திருக்கிறது.