டெல்லி: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சங்கல்ப் திவாஸ் என்ற பெயரில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி,
வெறுப்பு மற்றும் தவறான எண்ணத்தில், நாட்டை பிளவுபடுத்தும் சித்தாந்தவாதிகளுக்கு நமது சுதந்திர இயக்கத்தில் எந்தப் பங்கும் இல்லை என்றும், இந்திய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க காங்கிஸ் தொண்டர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. சங்கல்ப் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த விழாவின் தொடக்கமாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் கொடியை சோனியா காந்தி ஏற்றி வைத்தார். கொடியேற்றத்தின் போது சோனியா காந்தி ஏற்றிய கொடி அவரது கையிலேயே வந்து விழுந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் கொடி ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சோனியாகாந்தி, இந்திய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். அதன் தலைவர்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு இன்னல்கள் சந்தித்துள்ளனர் என்று கூறினார்.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை என்று கூறியவர், வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தங்களுக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை, நாட்டின் சுதந்திரத்திற்காக, பலர் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் வாழ்வையே அவர்கள் இழந்துள்ளனர். ஆனால் இந்த சுதந்திர போராட்டத்தில், நாட்டை பிளவுபடுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தவாதிகளால், நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்புஅச்சுறுத்தலாகி உள்ளது என்றும் கூறினார்.
மேலும், சிந்தாந்தவாதிகளால், இந்திய அடித்தளத்தின் மீதே தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகின்றன. நமது பண்பாடு சிதைக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியதுடன், சிந்தாந்தவாதிகளால், பொதுமக்கள் பயம் மற்றும் பாதுகாப்பில்லா உணர்வுடன் வாழ்க்கின்றனர்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.