திருப்பாவை –11 ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 11 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 11 :

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு  அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

 

பொருள் :

பெற்ற கன்றுகளுடன் கூடி இருக்கும் பசுக்களிடமிருந்து பால் கறப்பவர்களும்,பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று போர் புரிந்து வெற்றி புரிபவர்களுமான,குற்றமற்ற ஆயர்கள் வீட்டில் பிறந்த தங்கக்கொடி போன்றவளே!வருவாயாக!

புற்றில் இருக்கும் பாம்பைப் போன்ற இடையைக் கொண்ட காட்டிலிருக்கும் மயில் போன்றவளே!

நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழிகளும் உன் வீட்டு வாசலில் வந்து கூடி,மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கேட்டும் அசையாமல்,பேசாமல் உறங்கிக் கொண்டிருக்கும் செல்வமுள்ள பெண்ணே!

நீ இப்படி உறங்குவதன் பொருள் என்ன?எங்களுக்குத் தெரியவில்லை!