ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது.  இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 537 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் இரவு நடுக் கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை அங்கிருந்து விரட்டியடித்ததுடன்,  அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த 6 விசைப்படகு 43 மீனவர்கள் முதல்கட்டமாக சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகு அதிலிருந்த 12 மீனவர்களையும் நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மொத்தம் 55 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று (நேற்று) காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர். இதனால் மீனவ கிராமங்களில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள கடற்படையினர் அத்துமீறலை கண்டித்து, ராமேஸ்வரம் மண்டபம்  பகுதியைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்றுமுதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசை கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கங்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போவதாக அறிவித்துள்ளனர்.

இதையொட்டி,  ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பு முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல். மத்திய அரசு முழுமையாக மீனவர்கள் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தின் வலியுறுத்தி வருகின்றனர்.