நியூயார்க்: உலக நாடுகளை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 66 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா’ என்ற பெயரின் சுருக்கமே ஐஎஸ்ஐஎஸ் (ISIS). உலகின் மிகக்கொடூரமான பயங்கரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் இவர்கள் யாரைக் கொல்லப்போகிறார்கள், எப்படிக் கொல்வார்கள் என பயத்துடனேயே பல நாடுகள் அலறிக் கொண்டிருக்கின்றன.

இந்த கொடூர பயங்கரவாத அமைப்பானது, கடந்த  1990ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பக்லத்தில்  ‘ஜமாஅத் அல் தவ்ஹீத் வால் ஜிகாத்’ என்ற அமைப்பைத் தொடங்கி  சில தாக்குதல்களை நடத்தினர். பின்னர் ‘ஈராக்கிய அல் கொய்தா’ என்று தங்களது பேனரை மாற்றிக்கொண்டு ஈராக்கில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த போராடியது. அங்குள்ள எண்ணைக்கிணறுகளை கைப்பற்றி அதை உலக நாடுகளுக்கு விற்று கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வந்தது. இந்த பயங்கரவாj அமைப்பின் தலைவராக இருந்தவர் தலைவர் அல் ஸர்காவி. இவர்  அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதும், புதிய தலைவராக  அபுபக்கர் அல் பஹ்தாதி பதவிக்கு வந்தார். அல்கொய்தாவின் கிளையாகச் செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ‘அகண்ட இஸ்லாமிய தேசம்’ என்று தன் சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டு 2013ல் தனது முதல் தாக்குதலை ஈராக்கில் நிகழ்த்தியது.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு  ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, லிபியா, டென்மார்க் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகள் ஆளாகி உள்ளன.

இந்த பயங்கரவாத அமைப்பில், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில்,  66 இந்திய வம்சாவளிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள 2020ம்ஆண்டிற்கான பயங்கரவாதம் தொடர்பான ஆண்டறிக்கையில், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலுமான புள்ளி விவரங்களின்படி, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 66 அமெரிக்க இந்திய வம்சாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எந்த வெளிநாட்டு பயங்கரைவாதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கூறி உள்ளது. மேலும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செயல்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த மற்றும் பிராந்திய தீவிரவாத சக்திகளை கண்டறிந்து அவற்றை ஒடுக்குவதில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்ளிட்ட இந்திய தீவிரவாத எதிர்ப்புப் படைகள் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டி உள்ளது.

அதே சமயம், தீவிரவாத ஆட்சேர்ப்பு, வன்முறை தீவிரமயமாக்கல் மற்றும் மதங்களுக்கு இடையேயான பதட்டங்களைத் தூண்டுவதற்கு இணையத்தை பயன்படுத்து தல் போன்றவை இந்தியாவில் அதிகரிப்பதாக இந்திய அதிகாரிகள் கவலை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.