போடி

போடியில் படப்பிடிப்பு நேரத்தில் நடிகர் யோகிபாபுவின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இடையே நடந்த கைகலப்பில் உதவியாளர் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ‘மலையோரம் வீசும் பூங்காற்றே’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில்ல் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார்.  நடிகர் யோகி பாபுவின் உதவியாளராக சேலம் பொன்னம்மாபேட்டை தம்பி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதாம் உசேன் பணி புரிகிறார்.  சென்னை ஆழ்வார் திருநகர் பெரியார் நகர் வள்ளியம்மை சாலையை சேர்ந்த ராமச்சந்திரன்  நடிகர் யோகிபாபுவிடம் ஓட்டுநராக உள்ளார்.

இந்த படப்பிடிப்பில் உதவியாளர் சதாம் உசேனுக்கும், ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே கார் பார்க்கிங் பகுதியில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியது. ஓட்டுநர் ராமச்சந்திரன் திடீரென சதாம் உசேனின் மூக்கில் குத்தினார்.

இதனால் சதாம் உசேனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.  தகவல் அறிந்த நடிகர் யோகி பாபு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.  காவல் நிலையத்தில் சதாம் உசேன் ராமச்சந்திரன் மீது புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், நடிகரின் உதவியாளரும் ஓட்டுநரும் தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.